https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOM-sTaR5ud1HIt-9c4oNeut7vCmeRYgINg4MeS9Zitj1wE31ZTBTpFg7pAvPUqcSq9Eb3lMHVAFpSSuh5SEV8iyOg-lfPP-DeEIw0CyxHsEweVOpz-LWi4-mqTyrEIO1YK1r9QYXebxY/s320/hi-tech-car-device.jpgடொமார்….. !!!!!

வெள்ளை நிற ஹைபிரிட் கார், தன் 250 கி.மீ வேகத்தில் அந்த டீசல் டிரக்கின் மேல் பலமாக மோதியது. இடித்த கார் டோயாட்டாவின் லேட்டஸ்ட் மாடல் கேப்பிரிக்கா , இடிபட்ட டீசல் டிரக் பியூஜோவின் மிகப் பெரிய டிரக், திறந்து விட்டால், ஒரு ஊரையே வெள்ளத்தில் அழித்துவிடும் வால்யூமில் மிகப் பெரிய பானை வயிறு அதற்கு.

அதே சாலையில்,. அடுத்த டிராக்கில் வேகமாய் சென்று கொண்டிருந்த இன்னொரு காரில் இருந்த கெவின் அசட்டையாய் அவியல் போல் சிந்தனையில் சிக்கியிருந்தவன், துணுக்குற்று சூழ் நிலைக்கு வந்தான். சே! என்ன ஒரு விபத்து. வந்த வேகத்தையும், அடித்த நொடியையும் மனம் வேகமாய் ரீவைண்ட் செய்து பார்த்ததில் உடல் குலுங்கியது.
நிச்சயம் அந்த காரின் காவலன் எமலோகத்துக்கு விசா வாங்கியிருப்பான். ஆர் ஏ சி ஒன்றுமில்லை, நிச்சயம் கன்பர்ம்ட்டு பர்த்துதான். தீ பிடித்ததா…. கேள்வி மனதில் வர, அதற்கு விடை தெரியவில்லை. இவனும் உச்சகட்ட வேகத்தில் சென்று கொண்டிருக்கிறான். திரும்பி பார்த்தபோது, சாலையின் நிலவரம் தெரியவில்லை. சத்தம் கூட கேட்க வில்லை. எதனால் சத்தம் கேட்கவில்லை, நம் கார் கேப்பிரிக்காவின் சவுண்ட் புருப் இண்டிரியரா அல்லது கென்வுட்டின் சிஸ்டத்தின் இசை தூக்கலாய் இருந்ததாலா????.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjqjFAHVpWuXcThAXaZTGj8OgIhpj_8sHUIzlaU1EOKma8WCp_KfR73M0vxpiJ9L_O-gJBofv9G-wOYOPLDjOmkzsQr2w0nti3WaJBJ6Iy9vqK2-9eheD9YGuIFziYhGGabirgUw_7cuQ/s320/kevin.jpgஎன்னத்துக்கு இத்தனை வேகம். இயற்கை உபாதையாய் இருந்தால் கூட காருக்குள்ளே பெய்ய வேண்டியது தானே. யூஸ் லெஸ் இடியட். என்ன தலை போற அவசரம்….. இப்ப பாரு உண்மையிலேயே தலை போயிருச்சு. நசுங்கி கூழாயிருக்குமோ.. சே! நினைக்கவே உடம்பு நடுங்குது.
விலைமதிப்பு மிக்க மனித உயிர் இப்படி விபத்தில் முடிவது வேஸ்ட். எத்தனை லட்சியம் இருந்திருக்கும். ஏதோ ஒரு சினிமாவுக்கு போக தீர்மானித்து டிக்கட் கூட வாங்கியிருக்கலாம். இப்ப டிக்கட்ல்ல வாங்கிட்டான்.
அல்லது ஏதோ ஒரு பிளாட் கட்ட லோன் அப்ளை செய்திருப்பான். இவன் குடும்பத்தில் எத்தனை பேரோ, இவன் வருகைக்காக காத்திருப்பார்களோ. இவன் அலுவலகம் இவன் செயல் திறன் எதிர்பார்த்து காத்திருக்குமோ. இப்படி சிலந்தி வலை போல் பின்னப்பட்ட மனித உயிரை ஒரு நொடியில் பறக்க விட்டுவிட்டு பப்பரப்பே!! என படுத்து கிடப்பான் இந்த உடைந்த காருக்குள்ளே. கிடப்பானா அல்லது கிடப்பாரா. முதிர்ந்து இருக்க சான்ஸ் இல்ல, ஏதோ பொறுப்பில்லாத இரண்டும் கெட்டானாத்தான் இருக்கும்.
ஹோல்டான் கெவின், சினிக்காக யோசிக்காதே. யாரும் வேண்டும் என மரணிப்பதில்லை. அது விபத்து. அவன் அறியாமல் அவன் கவனம் சிதைந்த ஒரு நொடியில் நிகழ்ந்து விட்டது. உன் பாசி பிடித்த பிலாசபிக்கல் தாட் பேட்டர்ன், ஏதேதோ உனக்குள் உளறி, பெரிய கண்டுபிடிப்பு பிடித்த மாதிரியும், யூஸ்புல் டிஸ்கஷன் எனும் பெயரிலும், உன் நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கிறது. உன் ஈகோவை சொறிந்து கொண்டிருக்கிறது. உன்னை முயங்குதலை விட்டு விட்டு சமனத்துக்கு வா. என அழுத்தமாய் அக்கறையாய் ஒரு மனக் குரல் எழுந்தது.
காத்ரீன் நேற்றே சொன்னாள், வரும் போது மறக்காமல், ஜிபிஎஸ் சென்சாரின் ரினிவல் பேமெண்ட் குறித்து. வர வர இந்த டெலிகம்யூனிக்கஷேனல் கம்பெனிகளெல்லாம் முகமூடி கொள்ளையர்களாகிவிட்டனர். சோஷியல் நெட்வோர்க் என்பது போய், சோஷியல் நெட்வொர்த்தை பற்றியெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள். விலாசம் தவறென்பதால் ஐபி அட்ரெஸ்ஸின் கிளாஷ் இருக்கிறதென்றாள்.
அலுவலகத்தில் ஜான் சொன்னான், அவனுக்கு தெரிந்த யாரோ சீட் கோட் கொடுத்து ஜிபிஎஸ்ன் பேண்ட் வித்தை மாற்றி விட்டானாம். சே திருட்டு விசிடி, டிவிடி மாதிரி, காலங்கள் மாறினாலும் இந்த இடை நிலை பராசைட்டுக்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இன்றும் வேலைப் பளுவை காரணம் காட்டி, பல் இளிக்க முடியாது. கேத்தரின் மைக்ரோ வேவில் வைத்து வறுத்து விடுவாள். வேறு ஏதேனும் நல்ல காரணம் யோசி. வெயிட்… மாமியார் மத்தியானம் எம் எம் எஸ் செய்திருந்தாரே, பார்வேர்ட் செய்தேனா. ஹம்மாடி, மாட்டிக் கொண்டேன். இன்று செமத்தியாய் டோஸ் வாங்க வேண்டியிருக்கும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhN9GLl8L_GBKcMWM396GsZ5UB_DWpku6VX7YOv91OYs18vIJMun_VJq3xtZ_Qa50h8Qlr4fsJJqwoqRu09WH_UVb-zLNlM0AHpYQf3w8fj7Fs96ZVfCAuQbIJ8v6iWHrj42Z6HwNTf5TQ/s320/home.jpgகார் பார்க்கின் லீவர் உள்வாங்க, தன் பிஎம்டபுள்யூவின் பார்க்கிங் சிஸ்டத்தை ஆன் செய்தான். ரிம்மெனும் ஒலியுடன் பொசிஷன் சிஸ்டம் வேலையை தொடங்கியது. ஏதோ ஒரு விர் சத்தம், லூப்ரிக்கேஷன் செக் செய்ய வேண்டும், அந்த கம்பெனியின் ஏ.எம்.சி இன்னும் இருக்கிறதா, இல்லை காலாவாதி ஆயிற்றா. சிந்தனையோடே கெவின் வீட்டுக்குள் வந்தான்.
திறந்த கதவின் பாதையில் கேத்தரின் அழகாக நின்று கொண்டிருந்தாள். அந்த பச்சை சிந்தடிக் புடவையில் இன்னும் அழகாக இருந்தாள்.
கெவின் காதல் வயமானான்…. கைகள் விரித்து காதலுடன் சொன்னான், என் பூவே இன்றுதான் பூவையானது போல் இருக்கிறாய்…. கண்ணடித்து, வெட்கப்பட்ட மனைவியை கட்டிக் கொண்டான். கழுத்து பிரதேசத்தில் செண்ட் அமோகமாய் மணத்தது. லேசாய் மனம் கிறங்கி, மயக்கம் போல் சுழன்றது. வரவர இந்த செண்ட் கம்பெனிகளின் அராஜகம் தாங்கல. எக்ட்ஸி எலிமெண்ட்சை, கண்ட்ரோல்ட் அளவுக்கு மேலாக யூஸ் பண்ணுகிறார்களோ.
அவன் மனைவி கிறக்கமாய் சொன்னாள்…. கெவின் வி லவ். ஆஹா என்னவொரு மாற்றம், சங்க காலத்தில் ஐ லவ் என ஒருமையில் மட்டும் சொல்வார்களாம். இப்போது பரவாயில்லை எதிர்பார்ப்போ அல்லது ஏக்கமோ வி லவ் என சூசகமாய் சொல்ல பழகி விட்டோம்.
கெவின் ரிலாக்ஸ் இன் த செட்டிங், நான் ஒரு ஆரஞ்ச் கிரஷ் எடுத்துட்டு வர்றேன், அப்புறமா நம்ம அனிவர்சரி டின்னருக்கு அப்பலோ போயிடலாம். ஓகே.
சுருக்கென்று நினைவுக்கு வந்தது. இன்னிக்கு அனிவர்சரி இல்ல. அதான் அத்தை எம்.எம்.எஸ். செஞ்சு கேத்தரின கால் பண்ண சொல்லுங்க என சொன்னாரா. பரவாயில்ல, நான் அனிவர்சரி மறந்தத கேத்தரின் ரியலைஸ் பண்ணல. தப்பித்தது தம்பிராண் புண்ணியம்… அட்ஜஸ்ட் மாடிரா…. மவனே என மனம் எக்களித்தது.
செட்டியில் அமர்ந்து சுவரை பார்த்தான். எல்.டபிள்யூ.டி, செய்தி வாசித்தது. பெருகி வரும் சாலை விபத்தை தவிர்க்க, அரசு புது முறை ஒன்றை பரிட்ச்சார்ததமாக இன்று அறிமுகம் செய்துள்ளது. டிரைவர்களின் அஜாக்கிரதையே 70 சதவிகித விபத்துக்கு காரணம் என ஆய்வு சொன்னதால், டிரைவர்களின் கவனம் செயற்கையாய் உருவாக்க, 3டி புரோஷேக்‌ஷன் மூலம் சாலைகளில் வாகன பிம்பங்களை ஒளி பரப்புவது எனும் இத்திட்டத்தை பிரதமர் கொடி அசைத்து திறந்து வைத்தார்.
அதாவது இந்த வாகன பிம்பங்கள் உண்மை கார் போன்றோ, டிரக் போன்றோ…. சாலையில் உங்களோடு பயணிக்கும், சில நேரம் உங்களை உரசுவது போல் அருகில் வரும், இன்னும் சில நேரங்களில் பிம்ப வாகனத்தின் ஓட்டுனரோ, அல்லது பயணியோ உங்களை பார்த்து கையசைப்பார். இதனால் பயணிகள் சாலையில் அலர்ட்டாய் இருக்க உதவும்.
இதை வன்மையாக கண்டித்த எதிர்கட்சி தலைவர், இன்று வெளி நடப்பு செய்தார்.. வெளியே செல்லும் போது…. நாட்டையே ஆட்டை போடும் இந்த குடும்ப கட்சியின் கும்மாங்குத்து இது. இதை வன்மையாக கண்டிப்பதோடு எங்கள் கட்சியினர் சட்டசபையை விட்டு வெளி நடப்பு செய்வதாக அறிவித்துள்ளார்.
கெவின் தன் வாட்சின் நேரம் சரி பார்த்தான். 10:55 என துல்லியமாக தெரிந்த டிஸ்பிளேயின்
கீழே… தேதி இப்படி இருந்தது. 14.09.2078

பின் குறிப்பு:
·         எதிர்காலம் எப்படி இருக்கும் என கற்பனை செய்யும் சுதந்திரம் நமக்கு உண்டு.
·         ஹைபிரிட் கார், கரோலா, கேம்ரி என சி..சி… என ஒவ்வொரு மாடலுக்கு பெயர் வைக்கும் டயோட்டா கேப்பிரிக்கா என எதிர்காலத்தில் வைக்கலாமா....
·         LCD, LED என புதுசு புதுசாய் கண்டுபிடிப்பவர்கள், LWD (LIQUID WALL DISPLAY) என ஒரு புது தொழில் நுட்பம் கண்டுபிடிக்காமலா போவார்கள்.
·         வாசனை திரவியத்தில் நுண் ஊக்கப் பொருள் கலக்கும் அபாயம் உண்டு. அதைத்தான் கெவின் தன் மனைவியின் கழுத்தில் உணர்ந்தான் அல்லது நுகர்ந்தான்… (நுகர் பொருள் பண்டக சாலையில் வாங்கியதே அந்த செண்ட்)
·         3டி டெக்னாலஜியில், ஹோலாகிராம் ப்ரொஜெக்‌ஷனில்… இப்படி கார் பிம்பம் செய்து, ஆக்சிடெண்ட் செட்டப் செய்து….  சாலை விபத்தை இப்படி தடுக்கமுடியுமா.
·         அப்பவும் அனிவர்சரி மறக்கும் ஆண் மந்தப் புத்தியை மாற்ற முடியாதோ
·         அரசியல் அப்பவும் இப்படித்தான் இருக்குமோ… கொடி அசைப்பது… வெளி நடப்பு….

மண்ணில் புதைந்த ஆலயம் - பகுதி 4

மார்கழி மாதத்து காற்று சுகமாய் வருடியது. மதுரை சீமையின் ராஜ கொலு மண்டபம்.
முதலாம் நூற்றாண்டு, கண்டப்ப ராசா வந்து அமர்ந்ததும் மந்திரி பிரதானிகள் அமர்ந்தனர். உட்காரும் போது அவஸ்தையாய் அமர்ந்தார். ரோமானிய தூதுவர் சேரநாட்டு வருகை பற்றி மந்திரி சொல்ல தொடங்க ராசா வேதனையொடு ஏப்பம் வெளித் தெரியாமல் வாய் பொத்தி மறைத்தார்.

"சேர தேசத்தில் ரோமானியனை வழைத்து போட்டு இருக்கிறார்கள். கோழி தூவல் போன்ற தலை பாகை அனிந்து சேர மன்னன் நாணயம் வேறு புழக்கத்தில் விட்டு இருக்கிறான்"

"வணிகம் மிக்க பாண்டி மண்டலத்தை விட்டு அங்கு ஏன் சென்றான், நம் பாண்டி முத்தின் அருமை தெரியாதா. நாற்பது வருடத்துக்கு முன்னால் நடந்த சீசர் ஒப்பந்தம் தெரியாதா, அல்லது சீமையை அடுத்த‌ ரோமானிய குடி ஏற்றம் தெரியாதா. நம் நாட்டில் ஏன் வரவில்லை அந்த தூதுவன்."‍ உறுமலாய் ராசா கேட்டதும் அவரை குஷிப் படுத்த வேண்டி மந்திரி

"கப்பையும் கஞ்சியும் பிடித்து போயிற்றோ என்னவோ"
"கஞ்சி பிடித்ததா அல்லது வஞ்சி பிடித்ததா" என்று வெறோரு அதிகாரி சொல்ல, மண்டபம் குபீர் என சிரித்தது"அவன் ஊரை போல் குளிராய் இருப்பதனால் அங்கு சென்று இருக்கலாம்" முதிர்ந்த அதிகாரி சொன்னதும் சபை சமனம் ஆனது.

ஏன் போர்ச்சுகீசிய வெள்ளையர் நம் அங்காடித் தெருவில் உள்ளது தெரியவில்லையா" மருபடியும் சீரினார் ராசா, "ஒரு வேளை அதுவே காரணமாக இருக்கலாம் அல்லவா" முதிர்ந்த அதிகாரி மீண்டும் சொன்னார்.

"சுரைக்காய்க்கு உப்பு இல்லை என்று சொன்னால், ... " சட்டென எழுந்து நின்றார். சபை அதிசயித்தது. விறு விறு வென்று நடந்து சென்றார் ராசா. சபை திகைத்தது. ஏன் இத்தனை கோபம். நாம் ஒன்றும் தவறாக பேச வில்லையே. சில காலமாகவே ராசாவின் கோபம் எல்லோரையும் கலவரப் படுத்தியது.

வேகமாய் நடந்த போது, ராசா தன் தவறை உணர்ந்தார். மண்டபத்தை விட்டு ஏன் இப்படி பாதியில் வந்தோம். நின்று திரும்பி " நாளை இது பற்றி விரிவாய் பேசலாம், முக்கிய சோலி ஒண்ணு இருக்கு" மறுபடியும் நடக்க தொடங்கினார். பெருமூச்சு விட்டு மந்திரிகளும் சபை விட்டு விலகினர்.

உப்பரிகை சென்று கல் மேடையில் அமர்ந்தார். உட்காரும் போதும் கட்டியின் தொல்லை. இன்று மண்டபத்தில் வந்த கோபத்திற்கும் இதுவே காரணம். இது சரி இல்லை. உடல் உபாதை மனதை விரட்டுகிறது. எப்போதும் ஒரு பதட்டம். கண் பார்வை கூட லேசாய் தவறுகிறது. தூரத்தில் வரும் ஆள், தெரிந்தவர் போல் இருந்தாலும் சரியாக பிடி பட வில்லை. நாட்டை ஆள்பவன் அமைதி கொண்டு பல விசயங்கள் சிந்திக்கவும், செயல் படுத்தவும் வேண்டி இருக்கிறது.

சிந்தனையின் ஊடே, ஆள் வரும் அரவம் கேட்டது. சரி வரட்டும் என்று கண் மூடி காத்து இருந்தார். உப்பரிகையின் மேல் மெதுவான தப்படிகளில் நடந்து வந்தார் அவர். மெலிந்த தேகம், பால் நிறம், முகத்தில் தேஜஸ். அமைதியான புன்னகை.சிவந்த மெல்லிய உதடு. கோரை முடி.

“ரம்பான் வந்திருக்கேன்" தமிழில் லேசான மலையாள வாடை.

ஒ... இது ரம்பான் பட்டர் அல்லவா ராசா மேல் துண்டு உதறி எழுந்தார். "வா ரம்பான், தூரத்திலேயே பார்த்தேன். சட்டென்று பிடி பட வில்லை. நீ பக்கத்தில் வந்ததும் தெரிகிறது. நீ நிறைய மாறி இருக்கிறாய்.எங்கே உன‌து குடுமி ம‌ற்றும் பூணூல்"

மெல்லிய‌ புன்ன‌கையில் ர‌ம்பான் சொன்ன‌து "என்னை சாதி பிர‌ஷ்ட‌ம் செய்து, அடையாள‌த்தை அக‌ற்றி விட்டார்க‌ள், தெரியாதா நான் வேத‌த்திற்கு மாறி விட்டேன்"

"ஏன் இப்ப‌டி செய்தாய்” “ஒரு புனிதரை பார்த்தேன், அவர் பெயர் தோமா. அவரது உபதேசமும் செபமும் சரி எனப் பட்டது”

கண் மூடி, லேசாய் முகம் மேல் உயர்த்தி தொண்டை செருமிக் கொண்டு ராக பாவனையில்

ஏசுவின் சீடராம் புனித தோமையார்
ஏழை எளியோருக்காய் வாழ்வு துறந்து
பேயும் பிசாசும் நடுங்கி ஒட‌
வேதம் படித்து புதுமைகள் செய்தார்

பாடி முடித்து அந்த கவிதையின் அர்த்ததில் லயித்து அப்படியே கண் மூடி நின்றார்.
நல்ல கவிதையாக் இருக்கிறதே, என்ற ராசாவின் குரல் கேட்டு, ஹும்.... எளிமையான கவிதைகள் மூலம் நல்லதை சொல்ல முயலுகிறேன்.

சிலுவை எனும் அடையாளமும், வேதம் எனும் புத்தகமும் கொண்டு அன்பான வார்த்தைகளில் நம்மை அதிசயிக்கிறார். அவர் பிரார்த்தனையில் ஒரு வித்தியாசம். முழந்தாலிட்டு கைகள் குவித்து கண்கள் மூடி பிரார்த்திக்கிறார். அரமாயிக் மொழியில் ஒரு சிறிய பிரார்த்தனை செய்கிறார், மனதில் தோன்றும் வார்த்தைகள் சொல்லி பிரார்த்திக்க தூண்டுகிறார்.

"அதெல்லாம் சரி தான். நாம் சார்ந்து இருக்கும் மதத்தை, குலத்தை விடலாமா"


“நல்லது என தோன்றும் போது, உண்மை என உணரும் போது என்ன செய்ய, பிடித்த முயலுக்கு மூணு காலு என்று சொல்லவா. இறை உண்டென்றால்,அதுவும் ஒன்றே என்றால், அதை அடையும் வழியில் உள்ள மாறுதலை ஏறறுக் கொள்ள வேண்டியது தானே, தங்கள் சமூகத்தில் இன்னோரு விண்ணப்பம் உண்டு, அந்த புனிதரை இங்கு வரவழைக்க தங்கள் அனுமதி வேண்டும், தங்கள் உடல் நலம் பெற அவர் பிரார்த்திக்க வேண்டும்”

ரம்பா... அவர், அந்த புனிதர் இங்கு வருவது சரியா. அவர் பிரார்த்தனை சரியா. என் உடல் குணம் ஆகுமா.

மெல்ல முறுவலித்தான் ரம்பான். நான் சொல்லும் புனித‌ர் தோமா நம்பிக்கையின்மையின் சிகரம். சக சீடர்கள் சொல்லியும் கூட, அவரது குருவின் உயிர்ப்பையே நம்பாதவர். ஆணிக் காயங்களை கை விரலால் தொட்டுப் பார்த்து உண்ர்ந்தவர்.

என் மனது தீர்மானமாய் சொல்லுகிறது. இவரால் மரணம் பொய்க்கும், நோய் தீரும், வளம் கொளிக்கும். நம் மனித இயலாமை தோற்றுப் போகும்.

அமைதியாய் பார்த்தார் ராசா, தனக்குள் ஒரு மாறுதல் நிகழ்வதை உணர்ந்தார், அமைதி மனதிலும் உடலிலும் குடி ஏறியது போல். மறுக்க வாயும் வார்த்தையும் வராமல் ஆம் என்பதாய் தலை அசைத்தார்.

***

இனியன் நிமிர்ந்து பாண்டியனை பார்த்தான். திரும்பி அந்த கோவிலின் அஸ்திவாரம் பார்த்தான். லேசாய் சிரித்தான். இது இரண்டாயிரம் ஆண்டு முந்தையதா. புனித தோமையார் கட்டியதா. அவ‌ர் கி.பி.50 க‌ளில் வந்த‌து கேர‌ளாவிற்கு தானே.


தொடரும்.....

மண்ணில் புதைந்த ஆலயம் - பகுதி 3

சரித்திர ஆதாரம் நமக்குச் சொல்லும் சேதி, தனியாளாய் இங்கு வந்து தென் இந்தியாவில் மிக பெரிய மாறுதல் செய்து, கி.பி. 72 ல் கொல்லவும் பட்டார், புனித தோமையார். சென்னையில் விமான நிலையத்தின் அருகில் உயர்ந்து நிற்கும் மலை, அவர் கொல்லப்பட்ட இடமாய் சொல்லப் படுகிறது. சின்ன மலையில் அவர் தங்கியிருந்ததாகவும் சான்றுகள் உண்டு.

ஒடுக்கப்பட்ட மீனவர்களின் அன்புப் பாதுகாவலன் என்றும் வரலாற்று நூலாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களின் வாழ்வில் சுத்தம், கல்வி, தொழில், இறை வழிபாட்டு மேன்மை என பல வகைகளில் உறுதுணையாய் உழைத்து இருக்கிறார். பிற் காலத்தில் வந்த புனிதர் பிரான்ஸிஸ் சேவியருக்கு இவர் வகுத்து தந்த பாதையே, உதவியாய் இருந்தது.

இவர் போதனை கேட்டு மாறியவர்கள் என சரித்திரம் தரும் புள்ளி விவரம் இதோ, பிராமண்ர் 7,000 சத்திரியர் 4,000 சூத்திரர் 4,000 வைசியர் 3000 என்று மொத்தம் 18,000

பத்தொன்பது செத்தவருக்கு உயிர் கொடுத்தார். 260 மன நிலை தவறியவர்களை குணமாக்கினார். இந்தியாவின் இன்றைய வளர்சியை புரிந்து கொள்ள மேலே குறிப்பிட்டுள்ள தகவல் உதவும் என நம்புகிறேன்..

நம் கதையின் நாயகன் புதைந்த ஆலயம், அதை உருவாக்கியவர் இந்த மனிதர். நாம் நம் கதைக்கு செல்வோம். கண் மூடி கப்பலின் மேல் தளத்தில் இருந்த புனித தோமையார் அருகில் போவோமா...

கண் மூடிய இருட்டில்,சிந்தனை சீராய் ஒடி கொண்டு இருந்தது. குளிர் காற்றின் முரட்டுத்தனமான தொடுதல் சுகமாகத்தான் இருந்தது. தன் அருகே இருவர் வருவதும் அவர்கள் குனிந்து பாதம் தொடுவதும் தெரிந்தது. வானகத்து தந்தை நோக்கி பிரார்த்தனை செய்து, அவர்களை ஆசிர்வதித்தார். கண் திறக்க வேண்டியதில்லை என்பதாய் தோணிற்று..

இதென்ன ஒரு மாற்றம். நான் உபயோகம் உள்ள ஊழியனாகி விட்டேன். மனிதர்கள் என் பிரசங்கம் கேட்டு தங்கள் வழி மாற்றி, இறை ஏற்றுக் கொள்கிறார்கள். இதோ இப்போது தொடங்குவது பெரிய பணி.

இந்தியா.

தன் முன் விரிந்து இருக்கும் வேலையை மனதில் அசை போட்டபடி நின்று கொண்டு இருந்தார். இந்தியா பெரிய தேசம். பழமை வாய்ந்த சரித்திரமும், சந்த்தியும் கொண்டது.

இந்தியா திறமை சாலிகளை தன்னகத்தே கொண்டு உள்ளது. இந்தியா பணக்கார தேசம். தங்கம், வைரம், என பூமியின் தாது வளம் ஆகட்டும். நெல், கோதுமை என தாவர வகை ஆகட்டும், தன்னிறைவு பெற்ற புண்ணிய பூமி. இந்த பாரசீக, மங்கோலிய நாடுகளில் எல்லாம் இந்தியாவின் வளத்தை கண்டு கண் விரிகிறார்கள், படை எடுத்து சென்று அதன் வளங்களை கொள்ளை அடித்து அவர்கள் நாட்டிற்கு கொண்டு சென்று விடுவார்களோ, அப்படியும் நடக்கலாம். அப்படி நடந்தால் கூட இந்த மனிதர்கள் புத்திசாலிகள். மிகவும் கட்டுக் கோப்பான கலாச்சாரம் கொண்டவர்கள். தந்தை தாய் மீது அன்பும் மரியாதையும் உள்ளவர்கள். வல்லரசாய் திலங்கும் நிலை நிச்சயம் பெறும். இந்த தேசத்து மக்கள் உலகெங்கும் சென்று தங்கள் திறமையால் மனங்களை வென்று எடுப்பார்.

மிக பழமை வாய்ந்ததும் தீர்க்கமாய் வேர் விட்டதுமாய் இந்து மதம் ஏற்கனவே உள்ளது.

அது சரி, நானா செயல் படுகிறேன், ராபி அல்லவா என்னுள் இருக்கிறார். என் இயல்பு வேறு அல்லவா. நான் ஒரு கோழை, நம்பிக்கை யில்லாதவன். எனை மாற்றியவர் அவர் தானே. என்னை முழுதும் மாற்றிய அந்த நாள், நிகழ்வு…. அந்த அற்புத மாற்றம் நிகழ்ந்த இர‌வு இன்னும் மனதில் உள்ளது. மறுபடியும் மறுபடியும் அது மனத்திரையில் ஒடிக் கொண்டே இருக்கிறது.

தோமையார் அவர் வாழ்வை மாற்றி அமைத்த நிகழ்வு என நினைத்தது, மிகவும் முக்கியம் வாய்ந்த ஆன்மீக நிகழ்வு. இன்று உலகம் பரவிய கிறிஸ்துவ மதம் இந்த நிகழ்வு இல்லை என்றால் இல்லை. நாம் எதை பற்றி பேசப் போகிறோம் என வாசகர்கள் சிந்திக்கலாம்.
சிலுவை மரணத்தின் முத்தாய்ப்பான உயிர்ப்பா? இல்லை, அதை விட எளிமையானதும், இந்த மார்க்கம் தழைக்க தூண்டியதும் இதுவே.


முதலாம் நூற்றாண்டின் நிகழ்வு இது. பாலஸ்தீன மண், யூத இனத்தை சார்ந்த இம்மானுவேல் எனும் 33 வயது இளைஞனை சிலுவையில் அறைந்து கொன்றது ரோமானிய அரசு. மரணம் நிகழ்ந்து 40 நாள்.

அந்த மரணத்தின் பாதிப்பில் நாடு முழுவதும்.

குற்றம் அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது. அவரது சீடர்கள் மரண பயத்தில் ஒடுங்கி ஒளிந்து கொண்டு இருந்தனர்.

மறைந்தவர் துவங்கிய இறை மார்க்கம் தலைவன் இழந்து தொண்டன் இல்லாமல் தள்ளாடிக் கொண்டு இருந்த தருணம்.

முன்னிரவு வேளை, அடைத்திருந்த அறைக்குள்ளே....

உடல் நடுங்கியது, குளிரிலும் பயத்திலும். சிலுவையும், ரத்தமும், மரணமும் க‌ண்டது கண்ணை விட்டும மனதை விட்டும் அகல வில்லை. என்ன கொடுரம். கையில் துளைத்து இறங்கும் அந்த துறு பிடித்த ஆணியும், அந்த சிலுவை மரமும். என் தலைவனை கொன்று விட்டார்களே.

இனி என்ன செய்ய.

நான் பிழைப்பேனா. என்னை விட்டுவிடுவார்களா.

என்னை ஏன் கொல்ல வில்லை. இல்லை, அவர்கள் நினைத்தது நடந்து விட்டது. தலைவனை கொன்றதுமே, சீடர்கள் பயந்து ஒடுங்கி ஒதுங்கி விட்டார்கள். என்றாலும் இயேசு உயிர்த்தார் என சக சீடர்கள் சொல்கிறார்கள்.

எனக்கு நம்பிக்கை இல்லை. உடலை விட்டு நீங்கிய உயிர் எப்படி திரும்ப வரும். இது எப்படி சாத்தியம், அவரை நேரே கண்டு, அவர் ஆணி துளைத்த காயங்களில் என் கையை நுழைத்து பார்க்கும் வரை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.

சராசரி மனித வாழ்வின் பிரச்சனை, நம் அறிவுக்கு எட்டிய சேதிகளை மாத்திரமே உண்மை என ஏற்றுக் கொள்ள முடியும்.

பூட்டிய அறையினுள் திடிரென ஒளி சூழ்ந்தது. அவர்கள் மத்தியில் யேசு நின்றார். பளிரென்ற வெள்ளை ஆடையில் கனிவான முகத்தோடு,
உங்களுக்குச் சமாதானம் என்றார்.

வார்த்தைகள் எதிரொலித்தது. அந்த ஒலி பரவி, செவிகளை நிறைத்தது. அந்த ஒலியின் தாக்கம் உணர்வுகளில் பிரதிபலித்தது. தோமையாரை கனிவுடன் பார்த்து "வாயேன், ஆணிக் காயங்கள் தயாராக உள்ளன"

மந்திரத்துக்கு கட்டுப் பட்டது போல் மெதுவாய் நகர்ந்து யேசு அருகில் சென்று, தன் ஆள் காட்டி விரல் நுழைத்து கையிலும் மார்பிலும் தொட்டார். மனம் மலர்ந்தது, உடல் சிலிர்த்தது. ராபி என உள்ளுக்குள் ஒரு கேவல்.

"கண்டு விசுவசிப்பனை விட காணாது விசுவசிப்பவன் புண்ணியவான்" யேசு சொல்ல தோமையார் தலை கவிழ்ந்தார்.

நீண்ட தீ நாக்கு தலை மேல் இறங்கியது. தலை குறுகுறுத்து சுழன்றது. நான் எனது என்று பற்றிக் கொண்டு இருந்த பிரஞ்கை, என்னை உதறி விட்டு, அந்த தீயின் பின் சென்றது. அந்த தீ , புனிதமாயும் நோய் தீர்க்கும் மருந்து போலவும், அன்பும் சமாதானமுமாய் இருந்தது. அந்த நெருப்பு குளிராயும் இருந்த‌து. பரிசுத்த ஆவி இதுதானா.

தலையில் இறங்கிய அந்த நெருப்பு உள் இறங்கி நெற்றியிலும் புருவத்திலும், பின்னர் தொண்டை குழியிலும் நிறைவது பார்த்தேன், சூடும் இத‌மும் ஒரு சேர தோன்றிய‌து.

தோமா என்ப‌து எது. இந்த முடி இல்லை, கண் இல்லை, விரல் இல்லை. பின் எது தோமா.

இந்த சிந்தனை தோமாவா, இந்த பய எண்ணம் தோமாவா. ந‌ம்பிக்கையின்மையா...

உட‌ல், மூச்சு, நினைவு, சிந்த‌னை உருவாக்கிய‌ ம‌ன‌ வெளி, நான், உயிர், ஆன்மா என‌ எல்லாம் பிரித்து தெரிந்த‌து.

என் உடல் என் புத்தியின் கட்டுப்பாட்டில் இது வரை செயல் பட்டுக்கொண்டு இருந்தது தெரிந்தது. நான் என்று என் உட‌லையோ, புத்தியையோ நினைத்த‌ வேடிக்கை தெரிந்த‌து. உர‌க்க‌ச் சிரிக்க‌ தோணிய‌து. வாய் திறந்து சிரித்தார்.

உடல் இல்லை மனம் எனும் சிந்தனையின் மேகப் பூச்சில் நான் இல்லை எனும் போது, நான் என்னும் அடையாளம் விசித்திரமாய் இருந்தது.

பிற‌ப்பும் இல்லை, இறப்பை பற்றிய பயமும் இல்லை.

காலம் இல்லை. க‌ஷ்ட‌ம் இல்லை.

உடல் முறுக்கிக் கொண்டு தவித்தது. இதயம் ரத்தத்தின் வரவும் தேவையும் பார்த்து குளம்பி, வேகமாயும் மெதுவாயும் மாறி மாறி துடித்தது. நடு மார்பில் உயிர் நிலை விழித்துக் கொண்டு உட‌லின் அவ‌ஸ்தை ச‌ரி செய்ய‌ முய‌ன்ற‌து.

உடல் முழுதும் தாள லயம் மாறியது. வாய் கந்தகம் போல் சுவை பெற்றது, உஷ்ணக் காற்று ரோமை தூவாரங்களில் இருந்து வெளி வருவதாய் தோன்றியது. உமிழ் நீர் உபரியாய் சுரந்தது.

காது ஒ வென ஒலம் இட்டது. த‌ன்னிச்சையாய் திரும்பி பார்த்த‌ போது, எல்லோருக்கும் இதே அவஸ்தை என்பது புரிந்தது.

பயம் நீங்க வாசல் திறந்து வெளியில் ஓடி வந்து, வாய் திறந்து உரக்கக் குரலில் பேச தொடங்கினோம். எங்கள் வார்த்தைகள் புது வடிவம் பெற்றன. எல்லோருக்கும் புரிந்தது. அன்று துவங்கிய அந்த உற்சாகம் இன்று வரை குறையவில்லை. தூங்கும் அளவு குறை ந்தது. உடல் சோர்வு என்பது உணரவில்லை. மனிதர்க்கு உண்மை சொல்ல அதை உரத்து சொல்ல நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். மனதில் நினைப்பது நடக்கிறது. உயிர் பிழை என நினைத்தால் நடக்கிறது.

இந்த சேவை செய்ய தேர்ந்த கருவிதான் நான். முத்துக்கள் சுமக்கும் சிப்பி நான். நேரம் கடந்தது தெரியாமல் நின்று கொண்டு இருந்த தோமையாரை நிலக் காற்று வரவேற்றது. கண் திறந்து தீர்க்கமாய் பார்த்தார்.

கண் திறந்த அதே வேளை பாண்டிய மண்ணின் தலை நகரம் மதுரை சீமையில் பற்கள் கடித்து ஆவேசமாய் கண்டப்ப ராசா. சுருங்கிய தோலில் உள்ளிருந்து ஒரு வேதனை. நகம் பதிய சொறிந்து கொன்டு பின்னர் துடைத்தார். இது ஒரு தொல்லை. எத்தனை மருந்து பார்த்தாலும் போகவில்லை. மருத்துவன் கைக்கு அடங்கவில்லை.

அவர்கள் முன் நின்றிருந்த குடியானவன் நடுங்கி கொண்டு இருந்தான்.

( தொடரும் ) .....

மண்ணில் புதைந்த ஆலயம் - பகுதி 2

(தூத்துக்குடி வட்டார தமிழ் மிகவும் இனிமையானது. நம் வாசகரில் சிலருக்கு அதன் பரிச்சயம் இல்லாது இருக்கலாம். அடைப்புக் குறிக்குள் அதன் அர்த்தமும் சொல்லி விட்டேன்)

இனியனை இன்றைய தேதியில் விட்டு விட்டு, ஒரு இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி காலக் குதிரையில் செல்வோமே.

கி.பி. 30 வருடம்.

மாலை நேரம். அமைதியான கடல் நீலமாய் விரிந்து பரந்து இருந்தது. அதில் ஒற்றையாய் அழகிய‌ பாய் மரக் கப்பல். அந்த நீலக் கடலில் மெதுவாய் மிதந்து முன்னேறிக் கொண்டு இருந்தது. காற்றின் திசையில் ஒழுங்கு செய்யப்படு, பட படத்தது பாய் மரக் கப்பல் சீலை (துணி). சீரான பயணம் அஸ்தமன‌ சூரிய திசையில். சட சட வென பாய் மரத்து ஓசை காற்றில் கலந்திருக்க அலையின் லேசான ஒலி தவிர மற்றபடி நிசப்தம். இரவு மெதுவாய் அந்த கப்பலில் கவிழ்ந்த‌து.

இன்னும் ஒரு நாள் பயணம், தமிழகத்தின் தென் பகுதி காயல் பட்டிணம் (கொற்கை) வர. கப்பல் கிளம்பியது சிந்து அல்லது இன்றைய பாக்கிஸ்தான் ஆஃப்கான் பகுதி.

அன்று கொற்கை, கொல்லம் என இரு தென் தமிழத்துறைமுகங்கள். காற்றின் திசை பார்த்து சுங்கான் பிடித்து வைக்கப் பட்டு இருந்தது. சுங்கான் மாறிப் பிடித்து விட்டால் தாமிரபரணிதான்இன்றைய இலங்கையின் அன்றைய பெயர் தாமிரபர‌ணி.

கோதுமையும், கம்பளியும் கப்பலின் அடி வயிற்றை நிரப்பி இருக்க, மிக குறைந்த பயணிகளுடன் மேல் தளம் பரவி இருந்தது.

உப்பு தண்ணீர் பட்டு துருப்பிடித்த நங்கூரம் ஒரு அழகு பொருள் போல் வைக்கப் பட்டு, கட்டிய வடக் கயிறு, சுற்றி வைக்கப் பட்டு இருந்தது. வெள்ளையாய் மொட மொடத்தும் இருந்தது. ஒரு தாள லயத்தில் கப்பல் மேல் எழுந்தும் தாழ்ந்தும் பயணித்துக் கொண்டு இருந்தது.


வாருங்களேன் அங்கு இருவர் பேசிக் கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் அருகில் செல்லலாமே.

" ஏம்ல சடவா (சோர்வு) இருக்க"
“சும்மால்ல இருக்கேன்“

உட்காந்து இருந்த வடக் கயிற்றை விட்டு எழுந்தான். தன் இடுப்பு சீலையை இருக்க கட்டி, கருத்த அருணாக் (அரைஜானக் கயிறு . ஆண்கள் அணியும் இடுப்புக் கயிறு) கயிறை மேல் கட்டி சீலையால் கயிறு மறைத்தான். கோவணம் இறுக்க கட்டி காலை அகட்டி குனிந்து பின்னர் எழுந்து சரி செய்தான். மார்பு மேல் சீலை இல்லை,ராசாவும் தனவான்களுக்கு மட்டுமே அனுமதி. இளம் வயது, கட்டுடலுடன் கருப்பாய் இருந்தான்.

"மக்கா நீ தின்ன கோழி கறி. பாக்கத்தான் எச்சி ஊறும், உள்ள போனா உவத்திரவம் தான்"
"அதில்லல நான் அடுத்தாப்புல கடலுக்கு வரல, பட்டணத்துலயே இருக்கப் போரேன். அங்கனக்குள்ள எதாவது சோலி பாக்கணும்"
அடுத்தவன் அவனை வினோதமாய் பார்த்தான். தன் கரம் நீட்டி அவன் தோளில் தட்டினான், குரலில் அக்கரையும் கேலியும் தொனிக்க கேட்டான். "ஏம்புல கோட்டி கீட்டி புடிச்சிருக்கா, கடல்ல என்ன குறவு. பல ஊர் பாக்கலாம், பல தண்ணி குடிக்கலாம், பல குட்டி பிடிக்கலாம். அடுப்பாங்கரைக்குள்ள அவிஞ்சு கிடக்க நீ என்ன பொட்ட புள்ளயா"

“அட போல பொச கட்ட பயலே... நேத்து நம்ம கப்பல்ல சாமி ஒருத்தர பார்த்தேன். நீளமா காப்பி அங்கி போட்டுகிட்டு, அவருதாம்ல கையில மணி உருட்டிக்கிட்டு இருக்காரே. அவரு கூடயே போயிரலாம்னு தோணுது. உடம்பெல்லாம் துவச்சு போட்ட மாதிரி இருக்கு. அவரு கைய மோந்துனப்போ (முத்தம்) உச்சந்தலையில குறு குறுன்னுச்சு. பீத்துரான்னு (வீண் பெருமை) நினைக்காத, உண்மையாச் சொல்றேம், அவரு கடவுள் தாம்ல"”

"அவரு யாரு தெரியும்ல, கொண்ட பாரஸ்சுக்கு வேண்டியவர், இல்லன்னா அப்டாகாஸ் அவரே நேர்ல வந்து சொல்லி கப்பல்ல ஏத்துவாரா"

"அது யாருல கொண்டயும் அப்டாவும்"

அவசரமாய் ஆள் காட்டி விரலை வாயின் மேல் வைத்து சொன்னான்,

"மெதுவா பேசுல, நாம போயிருந்தோமே ஊரு அதுல கஸ்பார் ராசாவுக்கு வேண்டப் பட்டவரு. இவரு இவர் குடும்பம் எல்லாம் கிரேக்கத்து நாட்ட சேர்ந்தவங்க. இங்க வந்து யாவாரம் (வியாபாரம்) பார்த்து பாதி ஊர வாங்கிட்டாரு. ஆனா நல்லவரு. நீ சொல்லுறீயே சாமி அவர் சொல்லி இப்போ மதம் வேற மாறிட்டாரு. வாராரே சாமி இவர் கூட, பாண்டி சீமையில் செபம் படிக்கத்தேன் போறாரு"

இந்த சம்பாஷனையின் சாரம் எதுவும் கேட்காத, அவர்கள் குறிப்பிட்ட அந்த சாமியார் தோமையார் அமைதியாய், மறைந்து கொண்டு இறுந்த சூரியனை பார்த்து கொண்டு நின்றிருந்தார். அவர் மனதில் பல்வேறு எண்ணங்கள். புதிய நிலம். புது மனிதர்கள், புது கலாச்சாரம். இந்தியா பற்றி நிறைய கேட்டதுண்டு. இதுவே முதல் முறை.

நீண்ட பயணம், செல்ல வேண்டிய தூரம் அதிகம். இந்தியர் அன்பானவர், உணர்ச்சி வசப் படுபவர்கள், அவர்களை ரட்சிக்க வேண்டும். இது முடித்து சீனம் செல்ல வேண்டும்.

என் தலை சாயும் முன் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.

கடற் காற்று குளுமையாய் வீசி அடித்தது. கண் மூடி ஆழ்ந்த சிந்தனையில் அசையாது நின்றிருந்தார்

தன் நிலை விளக்கம்.

முழுத் தொடரும் எழுதி முடிக்க வில்லை. எழுத எழுத பதிவு செய்து கொண்டு இருக்கிறேன்.

இந்த தொடருக்கான முழுத் தகவல்களும் தயார். வலை மேய்ந்து புத்தகம் வாசித்து, குறிப்புக்கள் எல்லாம் ரெடி. பின் ஏன் இந்த தாமதம். முதல் பகுதி பதித்து ஒரு வாரத்திற்கும் மேலாக ஆகி விட்டது. ஒரு இரண்டு மணி நேரம் தூக்கம் தவிர்த்தால் முடிந்து விடுகிற வேலை தானே. என்று சர மாரியாய் என்னை நானே குறை சொல்லிக் கொள்வேன். விடை தெரியாது விழிப்பேன்.

அப்படி தொடங்கு,இப்படி செய்யலாம் என்று எண்ண்த்திற்கு குறைவு இல்லை. ம்.. சுமார், சரி இல்லை என்று புறம் தள்ளி விடுவேன். பின்னர் சில யோசனை சட்டென உதிக்கும், அது பரவாயில்லை என தோன்றும். உடன் எழுதி விடுவேன்.

தங்களுக்கும் என்ன இது, அடுத்த பகுதி வரவில்லையே என்ற எண்ணம் உண்டாகும் என நினைக்கிறேன். மன்னித்து விடுங்கள். சிறிது தாமதத்திற்கு.

இந்த புரிதல் நம் உறவு பலப்பட உதவும் என்பதால் இதை எழுதினேன்.

மண்ணில் புதைந்த ஆலயம் - பகுதி 1

  • உண்மை சம்பவங்களின் அடிப்படையில்
  • சரித்திர பிண்ணணியோடு ஒரு அதிர்ச்சி தொடர் கதை.

நன்றி திரு.ஸ்டீபன்

[திரு.ஸ்டீபன் அவர்களின் ஒலி ஒளி பேழையில் கண்ட தகவல்களின் தாக்கமே இந்த பதிவு. நன்றிகளையும் வணக்கத்தையும் தங்கள் சார்பாக அவர் பாதங்களில் சமர்ப்பித்து விட்டேன்]

உள்ளுணர்வு:

சில காரியங்களை தொடங்கும் முன்னே அது நல்லது என்று தோன்றும். கடினம் என்று தோன்றாது மனதிற்கு மகிழ்ச்சியும் நிறைவும் தரும். அப்படி ஒரு உணர்வை இந்த படைப்பு தொடங்கும் போது பெறுகிறேன்.

'என் மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்,
இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்'

என்ற திரை பாடல் வரிகள் மனதை வருடுகிறது

எழுத வேண்டும் என்று தீர்மானம் ஆனதும், வார்த்தைகள் கோர்வையாய் விழும் மாயம் இன்னும் புரியவில்லை. எழுதி முடித்த பின் சில வரிகளும், வார்த்தை கோர்வைகளும் எனக்கே அற்புதமாய் தோன்றுகிறது. இது நான் எழுதியதா என்ற கேள்வியும் வியப்பும் கூட வருகிறது

அற்புதம் என்று நாம் எழுதியதை சொல்ல அன்னியப் பட வேண்டும். என்னை உதறி விட்டு, நான் இல்லை என்ற நினைவு வந்தாலே நல்லா இருக்கு என்று சொல்ல முடியும்.

எழதுவது நான் இல்லை என்று தோன்றுவதால் சாதிப்பதாய் தோன்றவில்லை.

இந்த பதிவு எழுதும் போது எனக்கு மிகுந்த மகிழ்வும் ஒரு திருப்தி தோன்றுகிரது.


முன்னுரை:

இது கதையா அல்லது கட்டுரையா. பதிவா அல்லது தகவல்களா

நான் சிறு வயதில் சென்று பார்த்த கோவில் தான் இது. கேட்ட சேதி தான் இது. என்றாலும் திரு. ஸ்டீபன் அவர்களின் ஆராய்ச்சி கேட்டதும் மனது ஆடி போயிட்று . அந்த தகவல்களின் அடிப்படையிலே இதை எழுதுகிறேன்.

இந்த செய்தி கேட்ட போது வியப்பும் வேதனையுமாய் நான் உணர்ந்த உணர்வுகள் வார்த்தை வடிவம் பெற்றது தான் இந்த நவீனம்

ஆரம்பிக்கும் முன்:

சொக்கன் குடிஇருப்பு என்ற ஒரு சிறிய கிராமத்தின் கதை இது.
இது ஒரு உண்மை நிகழ்வு. கற்பனை கதை அல்ல.

சேசு மாரியாயி, அதுத்துதவி பாண்டியன் எல்லாம் நிஜத்தில் அங்கே நடமாடியவர்கள்.

சரி… இரண்டாயிரம் வருடத்து பழைய செய்தியை தூசி தட்டி சொல்லுவதன் நோக்கம்… நாம் கடந்து வநத பாதை அறிவது நல்லது அல்லவா

*மக்கள் நடந்து சென்ற மண்ணில் கிழே ஒரு ஆலயம் புதைந்து கிடந்தது
அப்படியா !!! எத்தனை நாட்களாக –
*ஒரு வருடம் இரண்டு வருடம் இல்லை. இருநூறு வருடங்களாக ஒரு ஆலயம் மண் மூடி இருந்து இருக்கிறது
*தென் தமிழ் நாட்டில் தூத்துக்குடி அருகில் இன்றும் இந்த கோவில் உண்டு.

*மண் மூடிய இந்த ஆலயமே இந்தியாவின் முதல் கிறித்துவ ஆலயம் என்றால் - சரித்திர சான்றுகள் இல்லை என்றாலும் சாத்தியம் உண்டு.
* மண் மூடிய காரணம் ------ ஒரு தமிழ் பெண்ணின் சாபம் !!!
*மதுரையை எரித்த கண்ணகியின் கதை நமக்கு தெரிந்து இருக்கும் பொது சேசு மரியாயின் கதை புதைந்து போன மர்மம் என்ன



*ஒரு பெண்ணின் சாபத்தால் நன்றாய் வாழ்ந்து கொண்டு இருந்த ஒரு கிராமம் சொக்கன் குடி இருப்பு நரிகளும் நாய்களும் குடியேறிய அவலம் நிகழ்ந்தது ஏன்
*அதென்ன தமிழ் பெண்ணின் சாபம் ------- குற்றமற்ற அந்த பெண்ணிற்கு விதிக்கப்பட்ட நடை விளக்கு தண்டணை தான்.
*நடை விளக்கு என்ற கொடுமையான தண்டனை என்ன ?


* சரி மூடிய மண் விலக காரணம்? மண் மூடி இருந்த ஆலயம் பற்றி எப்படி தெரிந்தது…. தவறு இழைத்ததால் ஆட்சி மாறும் வரை விதி காத்து இருந்ததா ------- ஆட்சி மாற்றத்திற்கு பின்னரே மூடிய மண் விலகியதா
* ஒரு ஆலயம் ஆட்சி மாற்றத்தால் பட்ட இன்னல்கள் என்ன என்ன
* குளம் வெட்டியதையும் கிணறு தூர் வாரியதையும் பதிவு செய்த அரசு பதிவேட்டில் ஒரு வருடமாய் நடந்த இந்த கோவில் அகழ்வாராய்ச்சி பதிக்க படாதது ஏன்.

கேள்விகளாய் விரிந்த இந்த முன்னுரை முற்றும்.

பதில்கள் அறிந்து கொள்ள வாருங்கள் நம் பதிவுக்கு செல்வோம்.

சில கற்பனை கதா பாத்திரங்களை நான் உருவாக்கி கொண்டேன். மற்றபடி நீங்கள் சந்திக்க இருக்கும் அத்தனை பெரும் நகமும் சதையுமாய் இந்த பூமியில் வாழ்ந்தவர்கள்


பகுதி 1


தூத்துக்குடி. தென் தமிழகத்தின் ஒரு கடற்கரை பட்டணம்.

விடியல் நேரம். சுருசுருப்பாய் எழுந்து ஒரு சிலுப்பு சிலுப்பி சேவல் கூவியது. கோழி கூவாது, சேவல் தான் கூவும்.

காற்றிலே உப்பின் மணமும், கனமும், வேகமும். உள் வாங்கி சுவாசித்த அத்தனை மனிதரும் அன்பிலும், வீரத்திலும், ரோசத்திலும் மேலோங்கி நிற்பார்கள். இப்போ தெரியுதா வெட்டு குத்து ஏன் ஜாஸ்தி ஆச்சுன்னு.

அந்த ஒற்றை வீட்டின் உயர்ந்த படிக்கட்டில் உட்கார்ந்து கருப்பட்டி காப்பியை சுவைத்து கொண்டு இருந்தான் இனியன். தூத்துக்குடி கருப்பட்டியும் அய்யனார் காபி பொடியும் சேரும் பொது உள்ள சுவை தனி. காப்பியின் திண்ணம் மிக குறைவு காரணம் நிறம் மாற்ற மட்டுமே ஊற்றப் பட்ட பாலின் அளவு. காலை காற்று மிகவும் சுகம். நன் பகல் மற்றும் மதியம் மட்டும் தாங்கவில்லை. அதுவும் பிசுபிசுப்பாய் வியர்க்கும் போதும் வியர்வை கையில் ஓட்டும் போதும் வியர்வை துடைக்கும் போது கருப்பாய் வரும் தூசியும் கஷ்டம். இனியன் பிறந்தது வளர்ந்தது, படித்தது எல்லாம் தூத்துக்குடி தான். வேலை செய்வது அமெரிக்காவில். பெற்றோரை பார்க்க இரண்டு வருடத்திற்கு ஒரு முறை பிறந்த ஊர் வருவது வழக்கம்.

வெளுப்பாய் நோஞ்சானாய் கண்ணாடி அணிந்து இரண்டு மக்கட் செல்வங்கள். முத்தது பெண், இரண்டு வயதில் மகன் அடுத்தது. காடு கரை ஓடி, மேல கீழ விழுந்து எந்திரிச்சா இனியன் போலே திடகாத்திரமா இருக்கும். குளு குளு அறையிலும் / வாகனத்திலும் நறுவிசாய் திங்கும் உணவிலும் பானகத்திலும் வேறுஎன்ன

“வேணாம் அத்தை மினரல் வாட்டர் பெட்டர், இந்த தண்ணி அவனுக்கு வயித்துக்கு ஒதுக்காது” என்று பேரனுக்கு தண்ணிர் தர முயலும் ஆச்சியை தடுக்கும் பெண்டாட்டி. நல்லவள். வருடத்திற்கு ஒரு முறை தானே மாமியார் மருமகள் மல்லு கட்டு என்பதால் விட்டு கொடுத்து இருவருமே.

தாத்தா பாண்டியன் நடு நிலை பள்ளி ஆசிரியர். பாடம் சரித்திரம். இலக்கியம் சரித்திரம் இரண்டுமே மாணவர் கணிப்பில் வேகாத பருப்புக்களே. விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பாஸ் அக வேண்டிய கட்டாயம் உண்டு. கணிதத்திற்கும் அறிவியலுக்கும் ஒரு தனி மவுசு. வாங்குகிற சம்பளத்துக்கு மேல் டியூசன் வரும் வாய்ப்பு எல்லாம் சரித்திரத்துக்கு இல்லை. சின்ன ஊர். சுருங்கிய செலவு. வாத்தியார் என்ற சமூக அந்தஸ்து. குறைவில்லா ஜீவனம்.

பிள்ளைய பெத்து வளர்த்தி ஒரு நல்ல நிலைக்கு ஆக்கியாச்சு. ரிட்டையரும் ஆயாச்சு, இனி என்ன, இயேசு எப்போ கூப்பிடுவாரோ அப்போ போக வேண்டியது தான். இனியனும் நல்ல பிள்ளை. மற்ற பிள்ளைகள போலே இல்லாம ஒழுங்கா படிச்சான் ஒழுக்கமா இருந்தான். ஒரே ஒரு தடவை நண்பர்களோடு போய் தண்ணி அடிச்சிட்டு வந்துட்டான். வெளியையும் சொல்லலே, அவன் கிட்டேயும் கேட்கல பொண்டாட்டி கிட்ட மட்டும் புலம் புனதொட சரி.

தன் இன்பத்திலும் துன்பத்திலும் உடன் இருந்த மனைவியை அன்பாய் பார்த்தவர். பிள்ளைகள் படிப்பு வளர்ப்பு எல்லாம் அவதான. வீடு கட்டினப்போ காதிலே கழுத்திலே உள்ள எல்லாத்தையும் கழட்டி கொடுத்துட்டு சேலை இழுத்து போர்த்திகிட்டு அவ கோவிலுக்கு வரும் போது துக்கம் நெஞ்சை அடைக்கும். ஒரு நாள் பொழுது இல்லாம இந்த குடும்பத்துகுன்னு உழைச்சவ. அவள கூட்டிகிட்டு டெல்லி போகணும். சென்னைக்கு அந்த பக்கம் போனதே இல்லை. காசு பணம் குறைவு இல்லை, நேரம் வாய்க்கல அவ்ளவுதான்.

தின பூசை செல்வது அவர் தவறியதே இல்லை. தவறாமல் செய்யும் வேலை இது. எழுந்தவுடன் சென்று முழு பூசை பார்க்காமல் விட்டால் அந்த நாள் பூரா எதோ போலே இருக்கும். காய்ச்சல் வந்தாலும் கூட தீர்த்த தொட்டி அருகில் உட்கர்ந்தாவது ஒரு பூசை பார்த்தால் நல்லது. இங்கே வீட்டிலே உட்கார்ற மாதிரி அங்கே கோவிலே உட்கார வேண்டியது தானே என்று விளக்கம் கொடுப்பார்.

அவர் முதல் பூசை சென்று திரும்பி வருகிறார். மூங்கில் மர திரட்சியில், முழங்கை நீளத்தில் முருங்கைகாய். யாழ்பாணம் காய் என்ற ஜாதி. அடுத்த கையில் உபரியாய் ஒரு கொப்பு முருங்கை இலை. முருங்கைகாய் சாம்பாரும் முருங்கை கீரை பொரியலும் இருந்தால் ஒரு கை சோறு கூட சாப்பிடுவான் இனியன்.


"குட்மார்னிங்" பதில் வணக்கம் சொல்லி தலை அசைத்தார் பாண்டியன்.
"எத்தனை மணிக்கு கிளம்புறோம்"
"பத்து மணிக்கு, சரியா இருக்கும்ல"

"ஆங்.... நாற்பது நிமிசம் திருச்செந்தூர், அப்புறம் ஒரு நாற்பது நிமிசம், அவ்வளவு தான்"

குறுகிய சாலையிலே விரைந்து கொண்டு இருந்தது அந்த குளு குளு கார். சிறிய விழிகளை விரித்து இரண்டு பக்கமும் பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தான் இனியன். தலை திருப்பி பின் இருக்கையில் பார்த்தான். தலை சாய்த்து கொட்டாவி விட்ட பாவனையில் தூங்கி கொண்டு இருந்தார் பாண்டியன்.

"... இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு"
உறக்கம் கலைந்து எழுந்து பார்த்தவர் சொன்னார் " இன்னும் ஒரு பத்து நிமிஷம் "

இனியன் தயார் ஆனான். புகைப்பட கருவியை இயக்கி பார்த்தான். குனிந்து கால் ஷுவின் லேசு இறுக்கி கொண்டான்.

மனதினுள் சொன்னான் "எத்தனை வருட கனவு இது"

வண்டி சிறிய குலுக்கலுடன் நிதானமான வேகத்தில் சென்று கொண்டு இருந்தது. இனியன் ஆர்வமாய் இரண்டு பக்கம் பார்த்தான். சிவப்பு மண் அவன் கவனத்தை ஈர்த்தது. ரத்த சிவப்பிலே பாலைவன மண். எங்கு பார்த்தாலும் சிவப்பாய் ஒரு பூமி.

சொக்கன் குடிஇருப்பு:

வண்டியின் ஏ சி அணைத்து விட்டு மூடி இருந்த சன்னலை கீழ் இறக்கினான். சுள்ளேன்று வெயில் முகத்தில் அடித்தது. சுட்டெரிக்கும் வெயில்.

ஆனால் ஒரு வித வாசனை. நீண்ட மூச்சு உள் இழுத்து நுரையிரலை நிரப்பிக் கொண்டான்.

ஆழமாய் உற்று பார்த்த பாண்டியன் சிரித்த முகத்தோடு சொன்னார் 'என்னை மாதிரியே செய்யுற. எப்பல்லாம் இந்த ஊருக்கு வருவேனோ அப்போ எல்லாம் இந்த ஊர் என்னோடு பேசுற மாதிரியே இருக்கும். எத்தனை காலம் புழங்கின ஊர் இது. எத்தனை புதுமை, எத்தனை சாவு'

அந்த ஆலயத்தின் வாசல் வரை அந்த தார் ரோடு. நீண்ட பயணத்தின் முடிவாய் அந்த வாகனம் நின்றது. அமைதியான சூழலில் எங்கோ குறைக்கும் நாயின் குரல் கேட்டது. வெளியில் இறங்காமல் அந்த ஆலயத்தை பார்த்த வாறு அப்படியே இருந்தான் இனியன். வண்டியை விட்டு இறங்கி இனியன் இருக்கும் இடம் வந்தார் பாண்டியன்.

தொந்தரவு செய்யாமல் அமைதியாய் பார்த்த படி நின்றார். வாகன ஒட்டி இளைப்பாற மரத்தடி நோக்கி சென்றான்.

அருகில் வந்து நின்ற கவனித்த இனியன், இறங்க வேண்டும் என்ற நினைவு வர தன கால் பதிய இறங்கினான். உஷ்ணக் காற்று மணல் வாரி தட்டியது நடக்கும் பொது கால்கள் புதைந்தது.

ஆலயத்தின் அருகில் வந்து குனிந்து அந்த அஸ்திவாரம் தொட்டான். நடந்து அவன் அருகில் வந்த பாண்டியன் சொன்னார். "புனித தோமையார் இறை இயேசுவின் நேரடி சீடர் உருவாகிய ஆலயம் இது. இந்தியாவின் முதல் ஆலயமாய் இருக்கலாம். பார் இத்தனை பெருமை உள்ளடக்கிய இந்த ஆலயம் அமைதியாய் ஒளிந்து கொண்டு இருக்கிறது”


……தொடரும்