மண்ணில் புதைந்த ஆலயம் - பகுதி 2

(தூத்துக்குடி வட்டார தமிழ் மிகவும் இனிமையானது. நம் வாசகரில் சிலருக்கு அதன் பரிச்சயம் இல்லாது இருக்கலாம். அடைப்புக் குறிக்குள் அதன் அர்த்தமும் சொல்லி விட்டேன்)

இனியனை இன்றைய தேதியில் விட்டு விட்டு, ஒரு இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி காலக் குதிரையில் செல்வோமே.

கி.பி. 30 வருடம்.

மாலை நேரம். அமைதியான கடல் நீலமாய் விரிந்து பரந்து இருந்தது. அதில் ஒற்றையாய் அழகிய‌ பாய் மரக் கப்பல். அந்த நீலக் கடலில் மெதுவாய் மிதந்து முன்னேறிக் கொண்டு இருந்தது. காற்றின் திசையில் ஒழுங்கு செய்யப்படு, பட படத்தது பாய் மரக் கப்பல் சீலை (துணி). சீரான பயணம் அஸ்தமன‌ சூரிய திசையில். சட சட வென பாய் மரத்து ஓசை காற்றில் கலந்திருக்க அலையின் லேசான ஒலி தவிர மற்றபடி நிசப்தம். இரவு மெதுவாய் அந்த கப்பலில் கவிழ்ந்த‌து.

இன்னும் ஒரு நாள் பயணம், தமிழகத்தின் தென் பகுதி காயல் பட்டிணம் (கொற்கை) வர. கப்பல் கிளம்பியது சிந்து அல்லது இன்றைய பாக்கிஸ்தான் ஆஃப்கான் பகுதி.

அன்று கொற்கை, கொல்லம் என இரு தென் தமிழத்துறைமுகங்கள். காற்றின் திசை பார்த்து சுங்கான் பிடித்து வைக்கப் பட்டு இருந்தது. சுங்கான் மாறிப் பிடித்து விட்டால் தாமிரபரணிதான்இன்றைய இலங்கையின் அன்றைய பெயர் தாமிரபர‌ணி.

கோதுமையும், கம்பளியும் கப்பலின் அடி வயிற்றை நிரப்பி இருக்க, மிக குறைந்த பயணிகளுடன் மேல் தளம் பரவி இருந்தது.

உப்பு தண்ணீர் பட்டு துருப்பிடித்த நங்கூரம் ஒரு அழகு பொருள் போல் வைக்கப் பட்டு, கட்டிய வடக் கயிறு, சுற்றி வைக்கப் பட்டு இருந்தது. வெள்ளையாய் மொட மொடத்தும் இருந்தது. ஒரு தாள லயத்தில் கப்பல் மேல் எழுந்தும் தாழ்ந்தும் பயணித்துக் கொண்டு இருந்தது.


வாருங்களேன் அங்கு இருவர் பேசிக் கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் அருகில் செல்லலாமே.

" ஏம்ல சடவா (சோர்வு) இருக்க"
“சும்மால்ல இருக்கேன்“

உட்காந்து இருந்த வடக் கயிற்றை விட்டு எழுந்தான். தன் இடுப்பு சீலையை இருக்க கட்டி, கருத்த அருணாக் (அரைஜானக் கயிறு . ஆண்கள் அணியும் இடுப்புக் கயிறு) கயிறை மேல் கட்டி சீலையால் கயிறு மறைத்தான். கோவணம் இறுக்க கட்டி காலை அகட்டி குனிந்து பின்னர் எழுந்து சரி செய்தான். மார்பு மேல் சீலை இல்லை,ராசாவும் தனவான்களுக்கு மட்டுமே அனுமதி. இளம் வயது, கட்டுடலுடன் கருப்பாய் இருந்தான்.

"மக்கா நீ தின்ன கோழி கறி. பாக்கத்தான் எச்சி ஊறும், உள்ள போனா உவத்திரவம் தான்"
"அதில்லல நான் அடுத்தாப்புல கடலுக்கு வரல, பட்டணத்துலயே இருக்கப் போரேன். அங்கனக்குள்ள எதாவது சோலி பாக்கணும்"
அடுத்தவன் அவனை வினோதமாய் பார்த்தான். தன் கரம் நீட்டி அவன் தோளில் தட்டினான், குரலில் அக்கரையும் கேலியும் தொனிக்க கேட்டான். "ஏம்புல கோட்டி கீட்டி புடிச்சிருக்கா, கடல்ல என்ன குறவு. பல ஊர் பாக்கலாம், பல தண்ணி குடிக்கலாம், பல குட்டி பிடிக்கலாம். அடுப்பாங்கரைக்குள்ள அவிஞ்சு கிடக்க நீ என்ன பொட்ட புள்ளயா"

“அட போல பொச கட்ட பயலே... நேத்து நம்ம கப்பல்ல சாமி ஒருத்தர பார்த்தேன். நீளமா காப்பி அங்கி போட்டுகிட்டு, அவருதாம்ல கையில மணி உருட்டிக்கிட்டு இருக்காரே. அவரு கூடயே போயிரலாம்னு தோணுது. உடம்பெல்லாம் துவச்சு போட்ட மாதிரி இருக்கு. அவரு கைய மோந்துனப்போ (முத்தம்) உச்சந்தலையில குறு குறுன்னுச்சு. பீத்துரான்னு (வீண் பெருமை) நினைக்காத, உண்மையாச் சொல்றேம், அவரு கடவுள் தாம்ல"”

"அவரு யாரு தெரியும்ல, கொண்ட பாரஸ்சுக்கு வேண்டியவர், இல்லன்னா அப்டாகாஸ் அவரே நேர்ல வந்து சொல்லி கப்பல்ல ஏத்துவாரா"

"அது யாருல கொண்டயும் அப்டாவும்"

அவசரமாய் ஆள் காட்டி விரலை வாயின் மேல் வைத்து சொன்னான்,

"மெதுவா பேசுல, நாம போயிருந்தோமே ஊரு அதுல கஸ்பார் ராசாவுக்கு வேண்டப் பட்டவரு. இவரு இவர் குடும்பம் எல்லாம் கிரேக்கத்து நாட்ட சேர்ந்தவங்க. இங்க வந்து யாவாரம் (வியாபாரம்) பார்த்து பாதி ஊர வாங்கிட்டாரு. ஆனா நல்லவரு. நீ சொல்லுறீயே சாமி அவர் சொல்லி இப்போ மதம் வேற மாறிட்டாரு. வாராரே சாமி இவர் கூட, பாண்டி சீமையில் செபம் படிக்கத்தேன் போறாரு"

இந்த சம்பாஷனையின் சாரம் எதுவும் கேட்காத, அவர்கள் குறிப்பிட்ட அந்த சாமியார் தோமையார் அமைதியாய், மறைந்து கொண்டு இறுந்த சூரியனை பார்த்து கொண்டு நின்றிருந்தார். அவர் மனதில் பல்வேறு எண்ணங்கள். புதிய நிலம். புது மனிதர்கள், புது கலாச்சாரம். இந்தியா பற்றி நிறைய கேட்டதுண்டு. இதுவே முதல் முறை.

நீண்ட பயணம், செல்ல வேண்டிய தூரம் அதிகம். இந்தியர் அன்பானவர், உணர்ச்சி வசப் படுபவர்கள், அவர்களை ரட்சிக்க வேண்டும். இது முடித்து சீனம் செல்ல வேண்டும்.

என் தலை சாயும் முன் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.

கடற் காற்று குளுமையாய் வீசி அடித்தது. கண் மூடி ஆழ்ந்த சிந்தனையில் அசையாது நின்றிருந்தார்

3 comments:

 1. வணக்கம்..

  ஒரு இனிமையான தொடரை வழங்கி வரும் அந்த அன்னை மாதாவே பார்க்க மனது ஆவல் கொள்கிறது. விரைவில் அனைவரும் இந்த தொடரின் மூலம் தரிசிக்க முடியும் என்ற நம்பிக்கையில் மனது அமைதி கொள்கிறது...

  வாழ்த்துகளுடன்

  செல்லத்துரை.

  ReplyDelete
 2. தங்களது கப்சா நேரம் என்ற பெயருக்கு பதிலாக... நல்ல ஒரு இறை பெயரை வைக்க வேண்டுகிறேன் .....

  வாழ்த்துகளுடன்

  செல்லத்துரை.

  ReplyDelete
 3. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பெயர் குறித்த தங்கள் எண்ணத்திற்கும் நன்றி. செய்து விடுவோமே.

  ReplyDelete